ஒரு காகிதத்தை 7 முறைக்கு மேல் பாதியாக மடிக்க முடியாது என்ற கருத்து நீண்டகாலமாக மக்களிடையே ஆழமாக பரவியிருந்தது.
எப்படியாவது ஏழு முறைக்கு மேல் மடித்து விடலாம் என்று பலரும் முயற்சித்து தோல்வியை மட்டுமே சந்தித்தனர்.
ஆனால், "இது உண்மை அல்ல, வெறும் கட்டுக்கதை தான், நான் ஏழு முறைக்கு மேல் மடித்து காட்டுவேன்" என்ற துணிச்சல் அந்த பெண்ணிடம் இருந்தது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரிட்னி கலிவன்(Britney Gallivan) என்ற பெண் 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி முதன்முதலாக காகிதத்தை 12 முறை பாதியாக மடித்து மக்களிடையே பரவி வந்த இந்தக் கட்டுக்கதை பொய் என்று நிரூபித்தார்.
பலரும் முயற்சி செய்த போதிலும் இவரால் மட்டும் எப்படி இதைச் சாதிக்க முடிந்தது.எவ்வளவு பெரிய காகிதம் ஆனாலும் அதனை பாதியாக மடிக்கும் போது அதன் ஐந்தாவது, ஆறாவது மடிப்புகளில் அது மிகவும் சிறியதாகி விடுகிறது. அப்படி இருக்கையில் எப்படி இது சாத்தியமானது.
முயற்சி செய்த அனைவருக்கும் இலக்கு ஒன்றுதான் அதாவது, காகிதத்தை ஏழு முறைக்கு மேல் பாதியாக மடிக்க வேண்டும். சற்றே வித்தியாசமான கோணத்தில் சிந்தித்த காரணத்தினால் வெற்றிக் கனியை அவரால் ருசிக்க முடிந்தது.
இதனைச் செய்து முடிக்க அவர் எடுத்துக் கொண்டது 1.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கழிவறைக்கு பயன்படுத்தும் காகிதச் சுருள் (Toilet paper) ஆகும்.
இந்த நீண்ட சுருளை பயன்படுத்தி அவர் காகிதத்தை 12 முறை பாதியாக மடித்து காட்டினார். இதன்மூலம் முதன்முதலாக காகிதத்தை அதிகமுறை பாதியாக மடித்த நபர் என்ற சாதனையை பிரிட்னி கலிவன்( Britney Gallivan ) நிகழ்த்தினார்.
இவரது அதே யோசனையைப் பின்பற்றி St. Mark's பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று ( இடம் : infinite half way,MIT ) 2011ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி 10 மைல் நீளம் கொண்ட கழிப்பறை காகிதச் சுருளை 13 முறை பாதியாக மடித்து பிரிட்னி கலிவனின் (12முறை) முந்தைய சாதனையை முறியடித்தனர்.
ஏழு மணி நேரம் முயற்சித்து வெற்றி கண்டிருந்தாலும் இவர்களது இச்சாதனை அதிகாரப்பூர்வமற்றது (unofficial) என்பதை கேட்கும்பொழுது சற்று வருத்தம் அளிக்கிறது.
0 Comments