தற்போது நாம் பயன்படுத்தி வரும் நாள்காட்டி முறையானது கிரிகோரியன் முறையாகும். பெரும்பாலான உலக நாடுகளும் இதையே பின்பற்றுகின்றன. பதின்மூன்றாம் போப் கிரிகோரி என்பவர் 1582 ல் இதனை உருவாக்கினார்.
இதற்கு முன் ஜூலியன் நாட்காட்டி (காலண்டர்) முறையே நடைமுறையில் இருந்தது. இம்முறையானது கிமு 45 இல் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்டது.
இதில் இருந்த சில தவறுகளால் பல ரோமானிய கத்தோலிக்க நாடுகள் கிரகோரியன் நாட்காட்டி முறைக்கு மாறத் தொடங்கின.
1908ஆம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஓர் தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை ரஷ்ய வீரர்கள் வென்றனர்.
மூன்று பதக்கங்களை வென்றுள்ளனர் இது நல்ல செய்திதானே என்று கேட்கிறீர்களா? ஆம் நல்ல செய்திதான்.இருப்பினும் ,இதற்கு முன் ஒரு உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
கிரிகோரியன் நாட்காட்டி முறையை இரு நூற்றாண்டுகளாக சில நாடுகள் தட்டிக் கழித்து வந்தாலும் வேறுவழியின்றி இந்த முறையை ஏற்றுக்கொண்டன. 1752 ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக பிரிட்டிஷ் மக்களும் இம்முறையை பின்பற்ற ஆரம்பித்தனர்.
ஆனால், லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடந்தபோது ரஷ்யா ஜூலியன் நாட்காட்டியை பின்பற்றி வந்ததால் போட்டிக்கு ரஷ்ய வீரர்கள் 12 நாட்கள் தாமதமாக சென்றுள்ளார்கள்.
இந்த நிகழ்வு திரைப்படமொன்றில் காலையில் 6 மணிக்கு நடைபெறும் போட்டிக்கு மாலை 6 மணிக்கு நகைச்சுவை நடிகர் செல்லும் காட்சியை கண்முன் நிறுத்துகின்றது.
5 நிமிடம் தாமதமாக வந்தாலே இணைய (ஆன்லைன் ) வகுப்புகளில் அனுமதி கிடைப்பது அரிது. இவர்களோ 12 நாட்கள் தாமதமாக வந்து மூன்று பதக்கங்களை வென்றுள்ளனர்.
இதில் பெரும் ஆச்சரியம் என்னவென்றால் இப்படி ஒரு நிகழ்வு நடந்து பத்து வருடங்கள் கழித்து 1918 இல் ஏற்பட்ட புரட்சிக்குப் பிறகே ரஷ்யா கிரிகோரியன் நாட்காட்டி முறையைப் பின்பற்றத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
0 Comments