தமிழறியா தமிழ் சமூகத்தை உருவாக்கும் நோக்கம் யாருக்கு இருக்கிறது? - காரணமும், தீர்வும்...

jallikattu


ந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, வேற்றுமையில் ஒற்றுமை போன்றவற்றை  சிறு வயதிலிருந்தே  படித்திருக்கிறோம். ஆனால் தற்பொழுது நிகழும் நிகழ்வுகள் அதனை சீர்குலைத்து விடுமோ என்ற ஐயத்தை உருவாக்குகிறது. இதற்கு முக்கிய காரணம் மொழிச்சிதைவு. இந்தியாவில் பல்வேறு இடங்களில் பல வகையான மொழிகள் பேசப்படுகின்றன

.மொழியை பண்பாட்டிலிருந்து தனியே பிரித்துப் பார்ப்பது என்பது முட்டாள்தனமான ஒன்றாகும்.மொழியே எல்லாவற்றிற்கும் அடிப்படை,அப்படி இருக்கையில் இன்று தமிழன் என்று சொல்லிக் கொண்டு பலர் தமிழகத்திற்குள் உண்ணிகளாய் ஊடுருவியுள்ளார்கள். தமிழ் பேசும் தமிழர்களை இப்பொழுது பார்ப்பதே அரிது (நான் உட்பட).

தமிழை வளர்ப்பதாக சொல்லிக்கொண்டு   கீச்சகத்தில் (டுவிட்டர்) அனைவருக்கும் பகிர்ந்து ஓரிரு நாட்கள் பேசுவதனால் என்ன பயன்?அல்லது நான் பச்சை தமிழன், தமிழ் பேசும் இந்தியன்,பிற மொழிகள் அறியாதவன் என்றெல்லாம் கூறினால் தான் நான் தமிழனா?

 தமிழை வளர்ப்போம் என்று கூறிக்கொண்டு தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் சில வாத்து மடையர் கூட்டம் தமிழை தாங்கள் தான்  வளர்த்ததாகவும், அவர்கள் இல்லையென்றால் தமிழ் தரணியின் அடியில் புதையுண்டிருக்கும் என்றும் கதை கட்டுகிறார்கள்.

தமிழர்களின் குழந்தைகளையும், எதிர்கால தலைமுறையினரையும் பிறமொழிகளை பயில வேண்டாம் என்று சொல்லுவதெல்லாம்அவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளின் தரம் குறைந்துவிடும் என்பதற்காக. இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏழை மாணவர்கள் அல்லது நடுத்தர மாணவர்கள் பிற மொழிகளை கற்றால் ,வாத்து மடையர்கள் நடத்தும் பள்ளியில் பிற மொழிகளைக் கற்றுத் தருவதாக கூறி பெற்றோர்களின் பணத்தை சுரண்ட வாய்ப்பில்லையே.

இத்தகைய மாண்புமிகு மனிதர்களின் பேச்சுக்கு செவி சாய்த்து காலத்தை வீணடிக்காமல் சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் தமிழை வளர்க்கிறார்களா, இல்லை அவரவர் குடும்பத்தின் பொருளாதாரத்தை வளர்க்க இப்படி வாய்ச்சவடால் விடுகிறார்களா என்று அப்போது உண்மை புலப்படும்.

அப்படியென்றால் பிற மொழிகளை கற்றுக் கொண்டால் தமிழ் அழியும் நிலை உருவாகுமே என்று கேட்கிறீர்களா?

   ஆம் . இப்படியே போனால் அத்தகைய நிலை உருவாகத்தான் செய்யும்.

tamil books


எதிர்த்துப் போராடும் குணம் உடைய ஒருவனை சிந்திக்க விடாமல் குழப்பத்தில் வைத்தால் அவன் தடுமாறுவது இயல்பு. இந்த தந்திரத்தை காலம் காலமாக பயன்படுத்தி நம்மை சிந்திக்க விடாமல் வைத்துள்ளார்கள்.

ஒருவன் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் பயிலலாம். ஆனால் அவன் தனது தாய் மொழியை தன் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கத் தவறினால் அன்று அவனது மொழியின் அழிவுக்கான விதை விதைக்கப்பட்டது.

எப்படி தமிழ் நமக்கெல்லாம் தாய்மொழியோ, தனிச்சிறப்புடையதோ அதுபோல பிற மொழிகளும் பல்வேறு  சிறப்புகளையும், பண்பாடுகளையும் கொண்டிருக்கும்.

 துன்பம் இழைத்த வருக்கும் நன்மையே செய் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிறார்

இத்தகைய நிலைப்பாடு உடையவன் தமிழன்.

தமிழறியாமலும் அதன் சிறப்பினை அறியாமலும் பலர் இருக்கலாம். ஆயினும், இன்றளவும் தொன்றுதொட்டு வழக்கில் இருக்கும் மொழிகளில் தமிழ் மொழி தான் முன்னிலை வகிக்கிறது. பிற மொழிகளையும் பிற மக்களையும் மதிக்க தவறுபவன், தமிழன் என்ற தகுதியை இழந்தவன்.

யார் தமிழன்?

பிறப்பால் ஒருவன் தமிழனாக இருந்தால் மட்டும் போதுமா வழிவழியாக தான் கற்ற அனைத்து மொழி அறிவையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

ஓர் இனத்தின் மொழி என்பது அந்த இனக்குழுவின் கலாச்சாரம், பண்பாடு, பல்வேறு வகையான கலைகள், அறிவியல் நுணுக்கங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

அதனை அழியாமல் வைத்திருப்பது நமது கையில் தான் உள்ளது.

இன்று நாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த முன்னோர்களின் பழக்கவழக்கங்களை அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களின் வாயிலாகவும், எழுதிவைத்த குறிப்புகளின் வாயிலாகவும் அறியலாம்.

தற்பொழுது நமக்கு எழுதும் பழக்கம் பெரும்பாலும் இல்லாவிட்டாலும், பேச்சுவழக்கில் தமிழ்ச்சொற்களை நாம் பயன்படுத்த வேண்டும்.

தமிழில்தான் பேச வேண்டும் என்று கட்டாயமில்லை முடிந்த அளவிற்கு தமிழில் பேசுவோம். பல மொழிகளைக் கலந்து அவைகளை மொழிச்சிதைவிற்கு உட்படுத்துவதை விட, அந்தந்த மொழிகளை அந்தந்த மொழியில் பேசுவது சாலச் சிறந்தது.

 

tamil sculptures

உதாரணமாக ஒரு பொருளின் பெயர் தமிழில் தெரியாவிட்டால் பிறமொழிகளில் பயன்படுத்தலாம். ஆனால் தமிழில் அதன் பெயர் தெரிந்தும், பிறர் தன்னை தவறாக நினைத்து விடுவார்களோ என்றெல்லாம் எண்ண வேண்டாம். தமிழனிடம் தமிழில் பேசுவதில் தவறேதுமில்லையே! . யாரேனும் தமிழில் பேசினால் சிலர் நகையாடவும், சிலர் புரியவில்லை என்றும் கூறத்தான் செய்வார்கள்.

ஆனால், நாளடைவில் அது இயல்பாகப் பழகிவிடும். எனவே தமிழ்ச் சொற்களை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி அவைகளை மீண்டும் வழக்கத்திற்கு கொண்டு வரவேண்டும்.

சொற்கள் மறைந்தால் மொழியும் மறையும். மொழி அழிந்தால் அந்த இனக்குழுவானது காலத்தின் சுவடுகளாக மட்டுமே இருக்கும்.

மொழியை உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது கடமை மட்டுமல்ல காலத்தின் கட்டாயம்!


Post a Comment

0 Comments