man with books


 வாட்ஸ் அப்பை வாடிக்கையாகவும் பேஸ்புக்கை ஃபேவரட்டாகவும்  கொண்ட இருபத்தொன்றாம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்த நூற்றாண்டில் உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் முக்கியமாக இந்தியாவில் உள்ள பெற்றோர்களின் கனவு தன் மகனுக்கு அல்லது மகளுக்கு நல்ல ஒரு கல்வியறிவை தரவேண்டும் என்பதே அதற்காக அவர்களுக்கு குழந்தை பிறந்தவுடனே ஒரு நெடிய வரிசையில் நின்று நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்க்கின்றனர். அதன் பிறகு அவர்கள் கனவு நிறைவேறியது என்று எண்ணிக் கொள்கின்றனர். ஆனால், அவர்களின் கனவு உண்மையிலே நிறைவேறியதா?

                  ஒருவேளை உண்மை என்றால் பிறகு எதற்கு தன் கல்வி படிப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த பல மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற இயலவில்லை?. ஏனென்றால் பள்ளி புத்தகங்கள் மாணவர்களுக்கு ஏட்டறிவை மட்டுமே தருகின்றது. அதனை எப்படி அவர்கள் வாழ்க்கையில் உபயோகப்படுத்தி வெற்றியடைய வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க தவறிவிட்டது. நமக்கு ஏட்டறிவு மட்டும் போதாது வாழ்க்கையில் வெற்றி பெற அதனுடன்  பட்டறிவும் பகுத்தறிவும் வேண்டும் இதனை பெற பல வழிகள் உள்ளன. அவற்றில் எளியவை புத்தகங்கள் வாசிப்பது மட்டுமே ஏனென்றால் ஒரு நல்ல புத்தகம் ஆயிரம் நண்பர்களுக்கு சமம் என்பர்.

             புத்தகம் வாசிப்பதின் முக்கியத்துவம் குறித்து பல வரலாற்றுத் தலைவர்கள் கூறியுள்ளனர். தன்  படுக்கையறை கூட படிப்பகத்தின் அருகே இருக்க வேண்டும் என்று கேட்டார் அண்ணல் அம்பேத்கர். முப்பத்தைந்து ஆண்டுகாலம்  நூலகத்திலேயே இருந்து கம்யூனிசம் என்னும் சித்தாந்தத்தை உருவாக்கினார் மாமேதை காரல்மார்க்ஸ். தூக்கு கயிற்றை முத்தமிடும் தன் கடைசி நொடி வரை புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார் பகத்சிங். தான் படித்த புத்தகத்தை முடித்து விட வேண்டும் என்பதற்காக அறுவை சிகிச்சையை கூட அடுத்த நாள் மாற்றி வைக்க சொன்னார் பேரறிஞர் அண்ணா.

                சிலர் அனுபவமே சிறந்த ஆசான் என்பார்கள் உண்மைதான் ஆதலால் தயங்காமல் உங்களின் அனுபவங்களை சேகரியுங்கள். ஆனால் நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.ஒரு நல்ல புத்தகம் படிப்பதின் மூலம் மற்றவர்கள் அனுபவங்களையும் சேகரிக்க வழிவகை செய்கிறது. உதாரணத்துக்கு ஒரு புத்தக எழுத்தாளர் தன்னுடைய 50 வயதில் ஒரு புத்தகத்தை எழுதுகிறார் என்றால் அவர் தன் வாழ்க்கையில் கடந்த 40 வருடங்களில் சந்தித்த பலதரப்பட்ட அனுபவங்களை அந்த புத்தகத்தில் எழுதியிருப்பார். அந்த புத்தகத்தை நாம் படிப்பதன் மூலம் 40 வருடத்திற்கான அனுபவங்களை நம்மால் எளிதில் பெற முடியும். அப்பொழுது சிந்தித்துப் பாருங்கள் 40 வருடம் நமக்கு லாபம் தானே. எனவே புத்தகங்களை வாசியுங்கள் உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை விரும்பி வாசியுங்கள் பிடித்த புத்தகம் என்றவுடன் சினிமா புத்தகங்கள் கதை புத்தகங்கள் அல்ல.

           நல்ல புத்தகம் என்றால் அந்தப் புத்தகத்தில் வாழ்க்கைக்குத் தேவைப்படும் வழிமுறைகளும் இருக்கவேண்டும். சிலர் புத்தகம் வாசிக்க வேண்டும் என்பதற்காக நாலைந்து புத்தகங்களை வாசித்துவிட்டு நான் புத்தகம் வாசித்தேன் இருந்தும் என் வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை என்று கூறுவர்.‌ நாம் ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது புத்தகம் வாசிக்க வேண்டுமே என்பதற்காக வாசிக்க கூடாது. அந்த புத்தகத்தில் உள்ள மையக் கருத்தினை கண்டறிய வேண்டும். அந்த எழுத்தாளருடைய மனநிலையை அவர் சொல்ல வரும் கருத்தை உள்வாங்க முயற்சி செய்ய வேண்டும். மேலும் அந்தக் கருத்துக்களை உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

sleeping man with book


           புத்தகங்களை வாசித்தல் மிகவும் நல்லது. ஆனால் சிலருக்கு புத்தகங்களை ஆடியோ வடிவில் கேட்க ஆர்வமாக இருக்கும். இன்னும் சிலருக்கு இணையதளத்தில் புத்தகங்கள் வாசிக்க ஆர்வமாக இருக்கும்.எனவே நீங்கள் விரும்புகின்ற வகையில் உங்கள் அறிவையும் அனுபவங்களையும் சேகரிக்கலாம்.

           எனவே நல்ல புத்தகங்களை படியுங்கள். அந்த புத்தகம் உங்கள் வாழ்க்கையில் ஒரு தேடலை உருவாக்கும். அந்த தேடல் நல்ல மாற்றத்திற்கு வழிவகை செய்யும். அதேபோல் வாசிப்பதற்கு வயதில்லை இளமைப் பருவத்தில் நாம் வாசிக்கும் புத்தகங்கள் மனதில் பசுமரத்தாணி போல் நன்றாக பதிந்திருக்கும். எனவே புத்தகங்களை காதலியுங்கள் அது ஒருபோதும் உங்களை‌ விட்டுப் போகாது.

           காதலுக்கு கண்ணில்லை

                     வாசிப்பதற்கு வயதில்லை