இந்த பரந்த உலகில்"கூகுளை குருவாகவும் யூடியூபை உலகமாகவும்‌"வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு வணக்கம்.

                    "அனுபவமே சிறந்த ஆசான்"என்பார்கள். என் வாழ்க்கையில் ஒரு இரவில் நான் பார்த்த காட்சிகளும், சந்தித்த மனிதர்களும் அவர்கள் எனக்கு கற்றுத் தந்த அனுபவங்களையும் இந்த கதையில் பார்ப்போம்.

 இந்தக் கதையில் வரும் நிகழ்வுகளை மனதில் காட்சிகளாய் ஓடவிட்டுப் பாருங்கள் அழகாக இருக்கும். கல்லூரி தேர்வுகள் முடிந்து  கோடை விடுமுறை துவங்கியது . நானும் என் ஊருக்குச் செல்ல கிளம்பி பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தேன்.  சிறிது நேரம் கழித்து தூரத்தில் ஒரு பேருந்து தராசுத் தட்டில் ஒரு பக்கம் மட்டும் எடை கல்லை வைத்தது போல் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு வந்தது.

 சிலர் பேருந்துக்குள் காத்து வரவில்லையோ என்று எண்ணும் படி படிக்கட்டில் ஒருவர் பின் ஒருவராக தொங்கிக் கொண்டு வந்தனர். பேருந்து நின்றதும் என் அருகில் இருந்த பெரியவர் ஒருவர் தன் கையில்  வைத்திருந்த பையை ஜன்னல் வழியாக சீட்டில் போட்டு இடத்தை பிடித்துக்கொண்டார். நானும் எனது பையை கழட்டி சீட் போடலாம் என்று நினைத்தேன். ஆனால் ஜன்னல் கம்பிகள் தடுத்து எனது பையை காப்பாற்றியது. காப்பாற்றியதா? என்றுதானே யோசிக்கிறீர்கள்.

 ஆம் பேருந்துக்குள்ளே செல்லும் போது அந்தப் பெரியவர் போட்ட பையை பேருந்திலிருந்து கீழே இறங்கும் போது யாரோ ஒருவர் எடுத்துக்கொண்டு இறங்கிவிட்டார். அந்தப் பெரியவர் 5000 ரூபாய் போச்சு என்று குமுறினார். நான் ஒரு நிமிடம் அந்த ஜன்னல் கம்பியை பார்த்து நகைத்தேன்.எனக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை ஆதலால் நின்று கொண்டே பயணித்தேன்.

 பேருந்தில் எனக்கு அருகே ஒரு தாய் தன் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள்.  குழந்தையோ பசியால் அழுது கொண்டிருந்தது. அப்பொழுது அருகில் இருந்த யாரும் கண்டுகொள்ளவில்லை பின்வரிசையில் அமர்ந்திருந்த திருநங்கை ஒருவர் சட்டென்று எழுந்து வந்து குழந்தை பசியால் அழுகிறது தாய்ப்பால் கொடுக்குமாறு அந்த பெண்ணிடம் கூறினாள்.அப்பொழுது அந்த திருநங்கை என் கண்களுக்கு முற்புதர்களுக்கு நடுவே ஒரு தேவதையாக காட்சியளித்தாள்.

  சிறிது நேரம் கழித்து ஒருவழியாக ஜன்னல் அருகில் உட்கார இடம் கிடைத்தது. அது ஒரு மாலை நேரம் நான் ஒரு இசைப் பிரியர் அதனால் எனது தலையணி ஒலிவாங்கியை (Heatset) எடுத்து காதில் மாட்டிக் கொண்டேன். அந்த மாலை மழை வரும் நேரத்தில் தென்றல் காற்று ஜன்னல் ஓரத்தில் இளையராஜா இசை காது வழியே உயிரில் இறங்கி தனிமையில் இனிமையை தெளித்தது. 

அதனை அனுபவிப்பதற்குள்  "தம்பி டிக்கெட்?" என்றார் கண்டக்டர் நல்லவேளை சில்லறை சரியாக வைத்திருந்தேன். அடுத்த பேருந்து நிலையத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. அப்பொழுது 22 வயதிற்குரிய இளைஞன் ஒருவன் என் அருகில் வந்து அமர்ந்தான்.அவனை பார்த்தால் பரட்டை முடியுடன் கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கழுத்தில் ஊசி, பாசி மணிகளுடன் பார்க்கவே கொஞ்சம் விசித்திரமாகத்தான் இருந்தான்.

 சில நிமிடங்கள் கடந்தன.நாங்கள் இருவரும் பேசத்தொடங்கினோம்.அப்போது அவன் "நானும்  பத்தாவது முடித்து விட்டு ஒரு புதிய பள்ளியில் என்னுடைய பதினொன்றாம் வகுப்பை  பயில தொடங்கினேன்" என்று அவன் தனது இருட்டான கடந்த காலத்தை பற்றி விவரிக்கத் தொடங்கினான்.

( 22 வயது இளைஞன் கூறுகிறான். ) 

"புதிய பள்ளி என்பதால் எனக்கு எவரிடமும் சகஜமாக பழக வாய்ப்பு கிடைக்கவில்லை. 

அப்பொழுதுதான் சூர்யாவைசந்தித்தேன். எனக்கு அப்போது தெரியாது என் வாழ்க்கை அவனால் இப்படி மாறும் என்று.  நான் அமைதியாக தான் இருப்பேன் அவன் தான் என்னிடம் நகைச்சுவையாக பேசி என்னை மகிழ்விப்பான். நாங்கள் இருவரும் பழகிய கொஞ்ச காலத்திலேயே நல்ல நண்பர்களாக மாறிட்டோம். அவனது  நண்பர்களுக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தான். பிறகு நாங்கள் ஒரு குழுவாக(கேங்காக) மாறினோம். 

பக்கத்து தெரு பசங்களுக்கும் எங்களுக்கும் அவ்வப்போது கைகலப்பு ஏற்படும். அப்படி இருக்கையில் ஒரு நாள் நான் ஒருவனை அடிக்கும்பொழுது பக்கத்தில் இருந்த இரும்பு கம்பியில் அவனது தலை அடிபட்டு ரத்தம் வரத் தொடங்கியது.பிறகு அவனை மருத்துவமனைக்கு அவனது நண்பர்கள் அழைத்துச்சென்றனர்.

 இந்த சம்பவம் நடந்து இரண்டு நாள் கூட இருக்காது நானும் என் நண்பனும் இரவு என் பிறந்தநாளை கொண்டாட வெளியே சென்றிருந்தோம். திடீரென நாலந்து பேர் வண்டியில் வந்து என் நண்பனையும் என்னையும் சுற்றி வலைத்து அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க எனக்கு நினைவு வந்ததும் எழுந்து பார்த்தேன்.என் நண்பன் மயக்கம் போட்டு விழுந்து  கிடந்தான்.

 அவனை தூக்கிட்டு ஒரு ஆட்டோவில் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றேன்.எனக்கு கை கால்களிலும் என் நண்பனுக்கு தலையிலும் பலத்த அடிபட்டு இருந்தது.சிறிது நேரத்திலேயே அவன் இறந்து விட்டான் என்ற செய்தி என் காதுக்கு வந்தது.

 என்னால் நம்பவே முடியவில்லை. ஆனால் எனக்கு தெரியும் இதற்கு யாரு காரணமென்று இருந்தாலும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏன்னென்றால் என் குடும்ப சூழ்நிலை அப்படி.  அப்பா இல்லை அம்மாவும், தங்கச்சியும் தான் இருந்தாங்க என் மேல அதிக நம்பிக்கை வச்சிருந்தாங்க. ஆனா என்கூடவே இருந்தவன் இப்போ இல்ல  என்ற விஷயத்தையும் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

அவனது நினைப்பாகவே இருந்தது.சரியாக அந்த நேரம் பார்த்து அந்த நான்கு பேரையும் பாத்துவிட்டேன். ஆனால் இந்த நொடி என் மனதில் இருந்ததெல்லாம் அவங்க நான்கு பேரையும் எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம்தான். அப்போது நான் எடுத்த அந்த முட்டாள்தனமான முடிவு என் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு காரணம். 

அந்த நான்கு பேரையும் பழி வாங்கினேன் . அந்த விஷயம் ஏரியா பசங்களுக்கு தெரிந்தது.எனக்கும் ஒரு மாதிரி கெத்தா ஆயிட்டோம் அப்படின்னு நினைப்பு. அந்த ஏரியால இருக்க ரவுடிங்க கூட சேர்ந்து சுத்த ஆரம்பிச்சேன் எல்லா கெட்ட பழக்கங்களும் பழக்கமாயிருச்சு.

 வீட்டில ஒதுக்கி வச்சுட்டாங்க அந்த ஒரு நொடி மட்டும் நான் யோசிச்சிருந்தா  என் வாழ்க்கை இப்படி மாறி இருக்காது. நானும்  உன்ன மாதிரி காலேஜ் படிச்சிட்டு நல்ல வேலையில் இருந்திருப்பேன் " அப்படின்னு சொல்லிட்டு கண்கலங்கினான். அப்புறம் என்னை  பார்த்து "யாரையும் நம்பாதே நல்லா படி"-னு சொல்லிட்டு கிளம்பிட்டான். அப்போது எனக்கே கண்கலங்கியது.

     பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்தடைந்தது. நான் இறங்கி என் கிராமத்திற்கு போகும் பேருந்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். அப்போது கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் கண் கண்ணாடி விற்றுக்கொண்டு இருந்தார். அவருக்கு அருகில் கைகால்களில் வண்ணம் பூசிக்கொண்டு ராமன் வேடமிட்டு ஒருவர் யாசித்து(பிச்சையெடுத்து) கொண்டு இருந்தார். 

அவ்வழியே செல்லும் மக்கள் அந்த ராமன் வேடமிட்டவருக்கு ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என பணம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டனர். ஆனால் யாரும் அந்த மாற்றுத்திறனாளி இடமிருந்து ஒரு கண்ணாடி கூட வாங்கவில்லை. அதை பார்த்ததும் எனக்கு ஒரு வேலை இந்த மாற்றுத்திறனாளியும் அனுமன் இல்ல இராமன் வேடமிட்டுக் கொண்டு கண்ணாடியை விற்று  இருந்தால் வாங்கி இருப்பார்களோ? என்னமோ என்று தோன்றியது.

 நெடுநேரமாகியும் பேருந்து வரவில்லை எனக்கு பசிக்க தொடங்கியது.என் தொலைபேசியை எடுத்துப் பார்த்தால் அதுவும் பசியால் உணவில்லாமல் உறங்கிவிட்டது.  எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அருகிலிருந்த ஒருவரிடம் கேட்டதற்கு "அந்தப் பேருந்தை காலை நேரத்திற்கு மாற்றிவிட்டனர்" என்று கூறினார். சரி வீட்டிற்குச் செய்தியை சொல்லிவிடலாம் என்று அருகில் இருந்தவர்களிடம் தொலைபேசியை கேட்டேன்.

 நான் என்னமோ சொத்தை எழுதி கேட்டதுபோல் யாரும் தரவில்லை. ஆனால் ஒருவரிடம் கேட்ட பொழுது அவர் என் பெயரையும் ஊரையும் கேட்டார் நான் கூறினேன். பிறகு என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை அவரும் சென்றுவிட்டார். இதனை பார்த்துக்கொண்டே இருந்த அங்குள்ள அன்றாடங்காய்ச்சி ஒருவர் என்னை அழைத்து அவரது தொலைபேசியை கொடுத்து உதவினார். நான் என் வீட்டிற்கு செய்தியைத் தெரிவித்தேன்.

  பிறகு அவரிடம் நடந்ததை சொன்னேன். அவர் என்னை பார்த்து "சாப்பிட்டியா?" என்று கேட்டார். இல்லை என்றதும் என்னை அவருடன் அழைத்துச் சென்றார். அப்போது இரவு 11:30 மணி இருக்கும் பெரும்பாலான கடைகள் மூடிவிட்டனர். ஆனால் சோசியல் சர்வீஸ் செய்வதற்காகவே சாலை ஓரத்தில் சைக்கிள் டயர்களை பொருத்திய தள்ளுவண்டியில் ஒரு சின்ன சிவப்பு நிற விளக்கு வெளிச்சத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவள்  இட்லி பானையில் வரும் புகையால் பாதி மறைக்கப்பட்டு வியர்வையில் நனைந்தவாறு ஒருபக்கம் இட்லி சுட்டு மறுபக்கம் தோசை,முட்டை என ஊற்றி கடைக்கு வரும் மனிதர்களின் பசியை அவள் செய்த உணவின் ருசியால் மறைத்துக் கொண்டிருந்தாள்.

 நாங்கள் கடைக்குச் சென்றதும் நாங்கள் கேட்ட உணவு சில நிமிடங்களில் செய்து கொண்டு வந்து கொடுத்தாள்.அந்த விளக்கு வெளிச்சத்தில் முகத்தில் சிறிய புன்னகையுடன் தனது வேலையை ரசித்து செய்து கொண்டிருந்தாள். அருகில்  அவளது மகள் அந்த சிறிய விளக்கு வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருந்தாள். தாயின் கஷ்டத்தை நினைத்து படிக்கின்ற குழந்தையையும் , தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தன் மகள் படிக்க வேண்டும் என்ற தாயையும் பார்க்கும் பொழுது அவர்கள் மீது கொண்ட மரியாதை இமய மலையின் அளவுக்கு உயர்ந்தது.

 இரவு உணவு முடிந்தது.பிறகு அந்த நபர்  அவர் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். பேருந்து நிலையத்திற்கு அருகில்  சிறிய சாக்குகளையும், துணிகளையும்  வைத்து கட்டப்பட்ட  ஒரு வீடு இருந்தது.  வீட்டிற்குள்ளே ஒருபக்கம் இசைக்கருவிகளும், மறுபக்கம் புத்தகங்களும் இருந்தன. நான் "நீங்கள் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டேன். 

அதற்கு அவர் "என் வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்று கூறி விட்டு உறங்கச் சென்றார்.